2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடுகல் வழிபாடு- தமிழ்கூடல் நிகழ்ச்சியில் தகவல்


2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடுகல் வழிபாடு- தமிழ்கூடல் நிகழ்ச்சியில் தகவல்
x

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடுகல் வழிபாடு இருந்தது என தமிழ்கூடல் நிகழ்ச்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை நடுகல்

மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி ஆகியவை இணைந்து தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சி, உலகத் தமிழ் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்று பேசினார். சங்க இயக்குனர்(பொ) அவ்வை அருள் தலைமை தாங்கி பேசினார். பேராசிரியர் ஜான்சி முன்னிலை வகித்தார். பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரியின் தாவர மருந்தியல் துறைத் தலைவர் தேவிஅறிவுசெல்வம், 'மதுரை நடுகற்கள்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வீரமரணம் அடைந்தவர்களுக்கு எடுக்கப்படும் கல் நடுகல். அரிதான செயல்கள் செய்தவர்களுக்கும் போரில் இறந்த வீரர்களுக்கும் முன்னோர் வழிபாடாகவும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. கி.மு.3-ம் நூற்றாண்டில் இருந்து 19-ம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் நமக்குக் கிடைத்துள்ளன. தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் ஆறு வகையான நடுகல் வழிபாடு கூறப்பட்டுள்ளது. அகநானூற்றில் 11 பாடல்களும், திருப்புகழில் ஒரு பாடலும் நடுகல் பற்றி கூறுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடுகல் வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது.

வீரர்கள் வில் அம்பு

மதுரை நடுகற்கள் என்று பார்க்கும்போது சோழவந்தான் தென்கரை கோவிலுக்கு அருகிலுள்ள நடுகல், பெண்தேவரடியார் உயிரை மாய்த்த தன்மையைக் காட்டுகிறது. இது மதுரையின் பழமையான நடுகல்லாகும். நடுகற்கள் சதுர பலகைக்கல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஊர்களின் கண்மாய்க்கரை, சாலையோரம், கோவில் கருவறை அருகிலும் கிடைத்துள்ளன. நடுகல் சிற்பத்தில், இடதுகால் எடுத்துவைப்பதை காட்டுவதாக அமைக்கப்பட்டு உள்ளன. இறந்து போனவருக்கு நடுகல் அமைக்கப்பட்டதால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. மதுரை சிந்தாமணியில் உள்ள நல்லுத்தாயம்மன் கோவில் நடுகல் அப்பா, பெண் மற்றும் குழந்தையோடு இறந்த செய்தியைத் தெரிவிக்கிறது. பெண்ணுக்குத் தந்தையே பிரசவம் பார்த்ததால் மரணம் நிகழ்ந்துள்ளது.

அம்மாப்பட்டி கிராமத்தில் 5 நடுகற்கள் கிடைத்துள்ளன. வீரர்கள் வில் அம்போடு உயிர்நீத்த செய்தியை இந்த நடுகல் தெரிவிக்கிறது. மேலக்கோட்டை குதிரைவீரர் நடுகல் வெண்கொற்றக் குடையோடு இருப்பதால் இது இனக்குழுத்தலைவருக்கு அல்லது மன்னருக்கு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பெரும்பாலான நடுகற்கள் சதி என்ற உடன்கட்டை ஏறுவதை குறிப்பிடுகின்றன. தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நடுகற்கள் கிடைத்து இருக்கின்றன. நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து உசிலம்பட்டி வரை நடுகற்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார். அதில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story