நாகர்கோவில், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்படுமா?
ரெயில்வே அட்டவணை வருகிற 1-ந் தேதி முதல் மாற்றிஅமைக்கப்பட உள்ள நிலையில் கோவை மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கோவையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோவை,
ரெயில்வே அட்டவணை வருகிற 1-ந் தேதி முதல் மாற்றிஅமைக்கப்பட உள்ள நிலையில் கோவை மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கோவையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
அட்டவணை மாற்றம்
ரெயில்வே சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே அட்டணை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ரெயில்வே அட்டவணை வருகிற 1-ந் தேதி மாற்றி வெளியிடப்பட உள்ளது. இதில் பல்வேறு ரெயில்கள் புறப்படும் நேரம் மற்றும் சேரும் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்மூலம் அந்தந்த ரெயில்களின் பயண நேரம் மாறும்.
ரெயில்வே அட்டவணை மாற்றி அமைக்கப்பட உள்ளதால் கோவையில் இருந்து நாகர்கோவில் மற்றும் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர் ஜெயராஜ் கூறியதாவது:-
தென் மாவட்ட மக்கள்
கோவை மற்றும் நீலகிரியில் ஏராளமான தென் மாவட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் கோவை-நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த ரெயில் கோவையில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. இதன்காரணமாக இந்த ரெயிலில் தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் பயணம் செய்து வந்தனர். இந்த ரெயிலில் கட்டணம் மிக குறைவாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து புறப்படும் நேரம் இரவு 7.30 என மாற்றியமைக்கப்பட்டது. முன்கூட்டியே இந்த ரெயில் புறப்படுவதால் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த ரெயில் நெல்லை சந்திப்பிற்கு அதிகாலை 3.20 மணிக்கு செல்வதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே இந்த ரெயிலை முன்பு இருந்தது போல் இரவு 8.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
கோவை-சென்னை எக்ஸ்பிரஸ்
கோவை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் குடும்பத்தோடு குறைந்த கட்டணத்தில் பயணம் செய்கின்றனர். ஆரம்பத்தில் இந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 10 மணிக்கு முன்பாக சென்றடைந்தது. இதனால் இதில் பயணம் செய்பவர்கள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அரசு பஸ்களில் செல்ல முடிந்தது.
ஆனால் புறப்படும் நேரம் மதியம் 3.15 மணி என மாற்றப்பட்டதால் இரவு 11 மணிக்கு தான் ரெயில் சென்னையை அடைகிறது. இதனால் இதில் வரும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அரசு பஸ்சில் செல்ல முடியாத நிலை உள்ளதுடன், அதிக கட்டணம் கொடுத்து டாக்சி, ஆட்டோவில் பயணிக்க வேண்டியது உள்ளது. கோவையில் இருந்து சென்னை செல்ல ரெயில் கட்டணமாக ரூ.190 உள்ளது. ஆனால் சென்னையில் இருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோ அல்லது டாக்சியில் ரூ.200-க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கோவை-சென்னை மற்றும் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.