நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பழைய முறைப்படியே வரி விதிக்கப்படும் மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பழைய முறைப்படியே வரி விதிக்கப்படும் என்று மேயர் மகேஷ் கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பழைய முறைப்படியே வரி விதிக்கப்படும் என்று மேயர் மகேஷ் கூறினார்.
மாநகராட்சி கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. இதற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர நல அதிகாரி டாக்டர் விஜய் சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சுவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர் உதயகுமார்:- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்ய வீடுகளில் தனித்தனியாக அளவீடு செய்து வருகிறார்கள். வீடுகளை அளவீடு செய்யாமல் தற்பொழுது உள்ளது போல் வரிகளை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம்
கவுன்சிலர் முத்துராமன்: கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பு முதல் ஈத்தாமொழி சந்திப்பு வரை ஒரு வார காலத்திற்குள் சாலை தரமாக அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதா கட்சி சார்பில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
கவுன்சிலர்கள் பேசும் போது, நாகர்கோவில் மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு புதிதாக பைப்லைன்கள் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக பைப் லைன்கள் வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கவும், ரேஷன் கடை மாற்றப்படுவதையும் தடுக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் கூறினார்கள்.
பழைய முறைப்படி வரி
மேயர் மகேஷ்:-
நாகர்கோவில் பகுதியில் ரியல் எஸ்டேட்டுக்கு மாநகராட்சி மூலமாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற்ற பிறகே மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். பிளாட்டுகள் அமைப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாநகர பகுதி தற்போது 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.4.2008-க்கு பிறகு தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி எந்த மண்டலமாக இருந்ததோ அதே மண்டலமாக தான் தற்பொழுது செயல்படும். எனவே மண்டலங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் தான் பழைய முறைப்படி வரி விதிக்கப்பட்டுள்ளது.
100 முதல் 600 சதுரஅடி வரை உள்ள வீடுகளுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1000 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு 50 சதவீதமும், 1001 முதல் 1800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும் 1801 சதுர அடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
நிதி விரைவில் ஒதுக்கீடு
மாநகராட்சி கவுன்சிலர்களின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோட்டார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு இடங்களில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அந்த பணி கிடப்பில் உள்ளது. சவேரியார் சந்திப்பு முதல் ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலை ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சீரமைக்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு புதிதாக 3 பொக்லைன் எந்திரம் வாங்கப்படும்.
இவ்வாறு மேயர் மகேஷ் கூறினார். மண்டல தலைவர்கள் செல்வகுமார், முத்துராமன் மற்றும் கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, டி.ஆர். செல்வம், உதயகுமார், சேகர், அக் ஷயாகண்ணன், ரமேஷ், நவீன்குமார், அய்யப்பன், அனுஷா பிரைட் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.