நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை மேம்படுத்தப்படுமா?


நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை   மேம்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கரடு-முரடான சாலை, சிதிலமடைந்த படிக்கட்டு என பொலிவிழந்து கிடப்பதால், நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை மேம்படுத்தப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

கரடு-முரடான சாலை, சிதிலமடைந்த படிக்கட்டு என பொலிவிழந்து கிடப்பதால், நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை மேம்படுத்தப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நல்லமுடி காட்சிமுனை

வால்பாறை பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்போது எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும்.

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. கரடு-முரடான சாலை, சிதிலமடைந்த பார்வை மாட மரத்தால் ஆன நடைபாதை உள்பட பல்வேறு சிரமங்களை சுற்றுலா பயணிகள் சந்திக்க நேரிடுகிறது. எனவே நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சரவணன்(பெங்களூரு):

நான் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறேன். இந்த நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினரால் நபர் ஒருவருக்கு ரூ.50 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக இந்த காட்சி முனை பற்றிய தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கூட எதுவுமே இல்லை.

இது எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது, இங்கிருந்து பார்த்தால் தெரியக்கூடிய கேரள வனப்பகுதிகளின் பெயர்கள், மலைவாழ் கிராம மக்களின் விவரங்கள், பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சியின் பெயர், வனப்பகுதியின் தன்மைகள் என்று எந்தவித தகவல்களும் தெரிவது இல்லை.

ஆபத்தான படிக்கட்டு

வாசிம்கான்(உக்கடம்):

நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு 20 முறைகளுக்கு மேல் வந்துள்ளேன். ஆனால் இந்த இடத்தில் வனத்துறையினரால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. குறிப்பாக டிக்கெட் வழங்கும் இடமே இல்லாமல் பயணிகள் நிழற்குடை பகுதிக்குள் அமர்ந்து டிக்கெட் வழங்கி வருகிறார்கள். இந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள காட்சி முனை பகுதிக்கு செல்லும் சாலை கரடு, முரடாக உள்ளது. வயதானவர்கள், குழந்தைகளால் நடந்து செல்ல முடிவதில்லை. காட்சி முனை பகுதியில் உள்ள பார்வையாளர் மாடத்திற்கு செல்வதற்கு கைப்பிடியுடன் கூடிய படிக்கட்டு இல்லாமல் மரக்கட்டைகளால் ஆன ஆபத்தான படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிதிலமடைந்துதான் இருக்கிறது. குப்பை தொட்டிகள் கூட இல்லை. எனவே இந்த காட்சிமுனையை மேம்படுத்த வேண்டும்.

முகிலன்(மைசூரு):

இந்த காட்சி முனை பகுதி மிகவும் அழகான இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து பார்க்கும்போது கேரள வனப்பகுதி, பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைவாழ் கிராமங்கள், பல நீர் வீழ்ச்சிகள் தெரிகிறது. ஆனால் அடிப்படை வசதிகள்தான் குறைவு. இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக இந்த இடத்தில் தொலைநோக்கி இல்லம் அமைத்து கொடுத்தால், இயற்கை அழகை தெளிவாக கண்டு ரசிக்க முடியும். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு சுற்றுலா தலத்தில் மேலும் வசதிகள் செய்து கொடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே இந்த காட்சி முனை பகுதியை நவீன வசதிகளுடன் புதுப்பொலிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story