நல்லம்பள்ளி அருகேநிலம் வாங்க வந்த வெளிமாநிலத்தவர்களிடம் ரூ.30 லட்சத்தை பறித்த மர்மகும்பல்போலீஸ் வேடமணிந்து கைவரிசை
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே போலீஸ் வேடமணிந்து நிலம் வாங்க வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.30 லட்சம் பறித்துவிட்டு காரில் தப்பி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிலபுரோக்கர்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் நாகோல் பகுதியை சேர்ந்தவர் பூமாரெட்டி (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் பூச்செட்டி பாபு (52). இவர்கள் 2 பேரும் நேற்று தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நிலத்தை வாங்குவதற்காக சுமார் ரூ.30 லட்சத்துடன் பஸ்சில் வந்தனர்.
பின்னர் அவர்கள் நிலம் வாங்கி தருவதாக கூறிய புரோக்கரை சந்தித்தனர். அப்போது நிலபுரோக்கர் நிலத்தை காண்பிப்பதாக கூறி 2 பேரையும் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை புறவடை தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு அழைத்து சென்றார்.
ரூ.30 லட்சம் பறிப்பு
தொடர்ந்து அங்கு காரில் போலீஸ் வேடம் அணிந்து வந்த சிலர் நைசாக பூமாரெட்டியிடம் பேச்சு கொடுத்து அவர் பையில் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை பறித்து விட்டு நிலபுரோக்கருடன் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பூமாரெட்டி இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அதில் நிலம் வாங்க வந்தவர்களை குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்து சென்ற நிலபுரோக்கர் தனது கூட்டாளிகளை போலீஸ் போல் வேடம் அணிந்து, நடித்து பணத்தை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
பரபரப்பு
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவான காட்சிகளை ஆராய்ந்து, இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களா? அல்லது வேறு மாநிலத்தவர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காரில் தப்பி சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.