நல்லாற்றை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி
உடுமலை அருகே நல்லாற்றை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நீராதாரங்கள்
மழைக்காலங்களில் ஏற்படுகின்ற விலை மதிப்பற்ற இயற்கை அபரிமிதமான தண்ணீரை ஒன்றிணைத்து கொண்டு நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதில் ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் மாதம் மும்மாரி பொழிந்த நிலை படிப்படியாக மாறி வறட்சி என்ற அரக்கனின் பிடியில் நீராதாரங்கள் சிக்கிக்கொண்டது.
இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்படாததால் அதை பராமரித்து பாதுகாப்பதிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் அவை படிப்படியாக தனது சுய பொழிவை இழந்து நீர்இருப்பை சுமந்து செல்ல முடியாமல் வெறுமனே சமதள பரப்பு போன்று காட்சி அளிக்கிறது.
ஆக்கிரமிப்பு
அந்த வகையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் உடுமலை வனச்சரகத்தின் ஒரு பகுதியில் மழைக்காலங்களில் உற்பத்தியாகின்ற நல்லாறு அடர்ந்த வனப்பகுதியில் தவழ்ந்து வந்து அடிவாரத்தை அடைந்து அதே சீற்றத்தோடு ஆறாய் பரந்து விரிந்து திருப்பூர், கோவை மாவட்டங்கள் வழியாக பாய்ந்து சென்று நிலத்தடி நீர்இருப்பை உயர்த்தி எண்ணற்ற உயிரினங்களை காப்பாற்றி வந்தது.
ஆனால் சூழ்நிலையை சாதகமாக கொண்டு செயல்படும் சுயநலம் மிகுந்த ஒரு சிலரது செயலால் நல்லாறு படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சிறு ஓடை போன்று காட்சி அளித்து வருகிறது.
நல்லாறு
நீர் மேலாண்மையை முறையாக கடைபிடிக்க தவறிய திறனற்ற நிர்வாகத்தால் கேட்பாராற்ற நிலைக்கு தள்ளப்பட்ட நல்லாறு அடி முதல் நுனிவரையிலும் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு சிக்கி தவித்து வருகிறது.
அதன் 2 கரைகளையும் படிப்படியாக கரைத்து நிலத்துடன் நிலமாக ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அதை அதிகாரிகள் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை கானல் நீராகவே இருந்து வருகிறது.
அதிகாரிகள் நடவடிக்கை
இதை சாதகமாக கொண்ட ஒரு சிலர் நல்லாற்றை ஆக்கிரமித்து பாதை அமைத்து வருகின்றனர். ஏற்கனவே தனது சுய பொழிவை இழந்த நல்லாறு ஆக்கிரமிப்பாளர்களால் மீண்டும் கூனிக்குறுகி சிறுவழிப் பாதையாக காட்சி அளிக்கிறது.
இயற்கையையும் அதனைச் சார்ந்த உயிர்களையும் காப்பாற்றும் பேராற்றல் மிகுந்த ஆற்றை அழிப்பது என்பது அடுத்த தலைமுறை வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
தண்ணீர் தண்ணீர் என்று தேடி அலையும் நாம் அதை தானாக கொண்டு வந்து அளிக்கும் நல்லாற்றை பராமரிப்பதற்கு முயற்சிக்கலாமே. ஆக்கிரமிப்புகளால் பொலிவிழந்துள்ள நல்லாற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி மீட்டெடுத்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு அதன் குறுக்காக தடுப்பணைகளையும் கட்ட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.