நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார் டிரைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
சொத்து அபகரிக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சொத்து அபகரிக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார் டிரைவர்
நாமக்கல் நடராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் கோபிநாத் (வயது 28). கார் டிரைவர். இவருடைய சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்தை அவரது உறவினர்கள் அபகரித்து விட்டதாகவும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டு தரக்கோரியும் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
அங்கு போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுக்க வந்தபோது கோபிநாத் திடீரென மயங்கி விட்டார். அவரை பரிசோதனை செய்தபோது அவர், முன்கூட்டியே விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்த போலீசார், கோபிநாத்தை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை முயற்சி
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு முயன்ற கோபிநாத்துக்கு, ஜானகி என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.