நாமக்கல் மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில் 2,586 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில் 2,586 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 50 அரசு பள்ளிகளில் 2,586 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
காலை உணவு திட்டம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை வேளையில் சத்தான உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று நாமக்கல்லில் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக ரவா, கிச்சடி மற்றும் ரவா கேசரியை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் ஸ்ரேயா சிங், ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுக்கு உணவை பரிமாறினர்.
உணவை சாப்பிட்டனர்
பின்னர் அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர். அவர்களுக்கு நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உணவை பரிமாறினார். மேலும் உணவு சுவையாக உள்ளதா? பிடித்துள்ளதா? என மாணவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இதில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரன், நகராட்சி ஆணையாளர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2,856 மாணவர்கள்
இதேபோல் நாமக்கல் நகராட்சியில் மஜித் தெரு மற்றும் பதிநகர், திருச்செங்கோடு நகராட்சியில் சின்னபாவடி, செங்கோடம்பாளையம், மாங்குட்டைபாளையம், சட்டையம்புதூர், ராஜகவுண்டம்பாளையம் மற்றும் நெசவாளர் காலனியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் நேற்று காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் கடங்காத்துப்பட்டி, சீக்குப்பாறைப்பட்டி, பூங்குளம்பட்டி, சோளக்காட்டுப்பட்டி, மங்களம்பட்டி உள்பட 41 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 50 பள்ளிகளில் 2,856 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.