நாமக்கல்லில் தரைப்பாலத்தில் கான்கிரீட் உடைந்து சேதம் பொதுமக்கள் அதிர்ச்சி
நாமக்கல்லில் தரைப்பாலத்தில் கான்கிரீட் உடைந்து சேதம் பொதுமக்கள் அதிர்ச்சி
நாமக்கல் நகராட்சி ஏ.எஸ்.பேட்டையில் இருந்து போதுப்பட்டிக்கு செல்லும் சாலையில் திருவள்ளுவர் நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்ட முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக கட்டுமான பணிகள் நடந்து வந்தது. அதற்காக போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.
இதனிடையே தரைப்பாலம் கட்டுமான பணிகள் முடிந்து, நேற்றுமுன்தினம் சாலை பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை தரைப்பாலத்தின் நடுவே கான்கிரீட் உடைந்து பாலம் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதிய தரைப்பாலம் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் பாலம் பழுதடைந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி பொறியாளர் சுகுமார் கூறியதாவது:-
திருவள்ளுவர் நகரில் 11 மீட்டர் நீள தரைப்பாலத்திற்கு அடியில் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக 2 பாகங்களாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாலத்தின் 2 பாகங்களையும் இணைக்கும் வகையில் தற்காலிகமாக தளமிட்டு மூடப்பட்டு இருந்தது. அது தற்போது சேதமடைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இரும்பு மூடியை தயார் செய்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.