நாமக்கல்லில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
நாமக்கல்லில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
நாமக்கல்லில் மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டி நடத்தப்பட்டது. இதில் 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சிலம்பம் போட்டி
நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பத்தில் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் 8 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் சிலம்பம் வீச்சு, உள்வீச்சு, வாறல் வெட்டு, தலைசுற்று, தலை உருட்டு, நடுக்கம்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிலம்ப வீரர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
சுழற்கோப்பை
முன்னதாக சிலம்பம் தனித்திறமை போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் டாக்டர் உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சிலம்பம் சுற்றி தனித்திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதேபோல தனித்திறமை போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் சுழற்கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்ற தலைவர் டாக்டர் எழில்செல்வன், துணைத்தலைவர் ராஜேந்திரகுமார், நேரு யுகேந்திரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தில்லை சிவக்குமார், போட்டி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சிலம்பம் பயிற்சியாளர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளர் யதாத்மானந்தர் பேசினார்.