சொத்து அடமான கடனுக்கு காப்பீட்டுக்காக கூடுதல் வசூல்: சங்ககிரி வங்கிக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் படைவீடு அருகே உள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி சந்திரமதி. இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்தின் ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் வீட்டுக்கடன் பெற்றார். பின்னர் அதை அவர் முழுமையாக செலுத்தியதன்பேரில், 2016-ம் ஆண்டில் கடன் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே சந்திரமதி கடந்த 2011-ம் ஆண்டில் லாரி வாங்க அதே வங்கியில் ரூ.20 லட்சம் கடனாக பெற்றார். அப்போது வங்கியில் சொத்து ஆவணம் இருப்பதால், வேறு ஆவணம் தேவையில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து கடன் முழுவதையும் கட்டிவிட்டு, வரவு செலவு கணக்குகளை பார்த்தபோது அதில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 40-ஐ கூடுதலாக வசூல் செய்து கடன் கணக்குகளை வங்கி நிர்வாகம் முடித்திருப்பது தெரியவந்தது.
சொத்து அடமானம் வைக்காதவர்கள் மட்டுமே வங்கி வழங்கும் கடனின் பாதுகாப்புக்காக காப்பீடு செய்வது நடைமுறையாகும். ஆனால் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்து அடமானத்தில் இருக்கும் போது கூடுதலாக காப்பீடு செய்து நுகர்வோருக்கு தேவை இன்றி ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 40 செலவு வைத்து உள்ளனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. சங்க செயலாளர் சுப்புராயனால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் காப்பீட்டுக்காக வங்கியில் வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோருக்கு முழுமையாக திருப்பி வழங்கவும், மன உளைச்சல் இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்கவும் வரவு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 40 வழங்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.