நாமக்கல் மாவட்டத்துக்குநீர்வள பாதுகாப்பு மேலாண்மையில் தேசிய அளவில் 2-ம் இடம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்துக்குநீர்வள பாதுகாப்பு மேலாண்மையில் தேசிய அளவில் 2-ம் இடம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 18 May 2023 12:30 AM IST (Updated: 18 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்திற்கு நீர்வள பாதுகாப்பு மேலாண்மையில் தேசிய அளவில் 2-ம் இடம் கிடைத்து இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தேசிய அளவில் 2-ம் இடம்

ஆண்டுதோறும் மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான இந்த விருதில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 கிராம ஊராட்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நீர்வள பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஏரிகள், ஆறுகள், நீரூற்றுகள் பாதுகாப்பு பணிகளும், புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

10 லட்சம் மரக்கன்றுகள் நடவு

மேலும் மாவட்டத்தின் சிறந்த திட்டமான நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டத்தின் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் நடப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சுமார் 2.25 லட்சம் கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

மாவட்டம் முழுவதும் செயற்கை நீர் சேமிப்பு பணிகளை பொறுத்தவரையில் மொத்தமாக 1,713 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு பண்னை குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள், நீர் சேமிப்பு குழாய், அகழி வெட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் மாவட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கருவேலமரங்கள் அகற்றம்

மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்கு நீரின் தரத்தை ஆய்வு செய்வதற்கும் நீரின் தர ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பல ஏரிகளிலும், நீர்நிலைகளிலும் அகற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு உள்ள பல்வேறு நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயந்துள்ளது. 4 குறு வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வகைப்பாடும் மேம்பட்டு உள்ளது. இதில் 2 குறு வட்டங்கள் பகுதி மிகை நுகர்வு பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கும், மற்ற 2 குறு வட்டங்கள் அபாயகரமான பகுதியில் இருந்து மிகை நுகர்வு பகுதிக்கும் நீர்மட்ட வகைப்பாடு மேம்பட்டு உள்ளது. மேலும் மற்ற குறு வட்டங்களிலும் கணிசமான அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் மத்திய அளவில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்த மாவட்டமாக 2-ம் இடம் பெற்று உள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story