நாமக்கல்: அருந்ததியர் குடியிருப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
அருந்ததியர் குடியிருப்பில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் அரசு நிகழ்ச்சியிலும், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள நேற்று கரூர் சென்றார். அதன்படி, இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலுவம்பட்டி ஊராட்சி, அருந்ததியர் குடியிருப்புக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து 3 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் மற்றும் பல்வேறு உயர்கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், குடியிருப்பில் குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி பொதுமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதல்-அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங்., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.