நம்பியூர் கெட்டிச்செவியூரில்ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தீ விபத்து


நம்பியூர் கெட்டிச்செவியூரில்ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தீ விபத்து
x

நம்பியூர் அருகே கெட்டிச்செவியூரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பவுன் நகை, ரூ.3 லட்சம் எரிந்து சேதம் ஆனது.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே கெட்டிச்செவியூரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பவுன் நகை, ரூ.3 லட்சம் எரிந்து சேதம் ஆனது.

ரியல் எஸ்டேட் அதிபர்

நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஓடக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். விவசாயமும் செய்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி. இவர் கோபி அருகே மொடச்சூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் நவீன் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.

வெங்கடேசுக்கு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. சுற்றிலும் சுவராலும், மேற்கூரை தென்னை ஓலையால் அமைத்து, அதன் மேல் தகரத்தினாலான சீட் வைத்து அந்த வீட்டை அவர் கட்டி உள்ளார்.

தீ விபத்து

சம்பவத்தன்று வெங்கடேஷ், வசந்தி, நவீன் ஆகியோர் வெளியே சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் வெங்கடேசின் தந்தை பெருமாள், தாய் பாவாயாள் ஆகியோர் இருந்து உள்ளனர். அப்போது மதியம் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்து உள்ளது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதை கண்டதும் வீட்டில் இருந்த பெருமாள், பாவாயாள் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்

30 பவுன் நகை- ரூ.3 லட்சம்

எனினும் இந்த தீ விபத்தில் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, ரூ.3 லட்சம், வீடு மற்றும் தோட்டத்தின் பத்திரங்கள், வசந்தியின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், நவீனின் பள்ளி சான்றிதழ்கள், பிரிட்ஜ், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சமையல் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. மேலும் இந்த தீ விபத்தில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 'மின் கசிவு ஏற்பட்டு அதனால் தீ விபத்து நிகழ்ந்து உள்ளது,' என்றனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story