பேச்சாளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னோட்டம்...! அமைச்சரவை புதன்கிழமை மாறுகிறது...? - பழனிவேல் தியாகராஜன் மாற்றமா...!


பேச்சாளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னோட்டம்...! அமைச்சரவை புதன்கிழமை மாறுகிறது...? - பழனிவேல் தியாகராஜன் மாற்றமா...!
x
தினத்தந்தி 8 May 2023 2:54 PM IST (Updated: 8 May 2023 2:57 PM IST)
t-max-icont-min-icon

பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுவதால் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்தும் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவருகின்றன.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் நாளை வரை தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் முதலில் இடம் பெற்றிருந்தன.

ஆனால் மதுரை சிம்மக்கல் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் பேச செல்லவில்லை.

அவருக்கு பதில் திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசினார். இதனால் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவருக்குப் பதில் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் பேசியதாக வெளியான ஆடியோ அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து விளக்கம் அளித்து விட்டு வந்திருந்தார்.

இதன் பிறகு இப்போது கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுவதால் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்தும் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவருகின்றன.

வருகிற புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைக்க கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்படலாம் என்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது கூட அமைச்சர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. அந்த சமயத்தில் பட்டியலின அரசு அலுவலர் ஒருவரை சாதி பெயரை சொல்லி விமர்சித்ததாக எழுந்த புகாரில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது.

அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, முத்துசாமி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், காந்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகிய 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டதே தவிர யாரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை.

ஆனால் இப்போது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் கட்சித் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லாத நிலையில் பால்வளத்துறை அமைச்சராக உள்ள ஆவடி நாசர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதில் 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அப்போது புதுமுகங்கள் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Next Story