நாமக்கல்லில் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்
நாமக்கல்லில் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் உமா, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், மேற்கொண்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தரமான முறையில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவால் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கவிதா, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.