நாமக்கல்லில், இன்று நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


நாமக்கல்லில், இன்று  நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x

நாமக்கல்லில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நாமக்கல்

நாமக்கல்லில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல்லில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டை முன்னிட்டு நாமக்கல்- சேலம் சாலை பொம்மைகுட்டைமேடு பகுதியில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டின் முகப்பானது காண்பவர்கள் கண்ணை கவரும் வகையில் சென்னை ரிப்பன் கட்டிடம் வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் உணவு அருந்தும் வகையில் மாநாட்டு திடலில் பெரிய அளவிலான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. கட்சியினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாகனங்களை நிறுத்த மாநாட்டு திடல் அருகே 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இந்த மாநாட்டினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெற உள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. வரவேற்று பேசுகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.

இதையொட்டி காலை 9.30 மணிக்கு கருத்தரங்கம் தொடங்குகிறது. மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்கிற தலைப்பில் ஆ.ராசா எம்.பி., தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்கிற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்கிற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்கிற தலைப்பில் சுப.வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர்.

பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மக்களோடு நில், மக்களோடு வாழ் என்கிற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகிறார். அதை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் பேசுகின்றனர். இறுதியாக மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். முடிவில் அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறுகிறார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக நேற்று கரூரில் இருந்து கார் மூலமாக நாமக்கல் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திரண்டு இருந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்டத்தில் டிரோன் கேமராக்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உள்ளது. இதேபோல் கனரக வாகனங்களை நாமக்கல் நகருக்குள் இயக்க வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story