காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி


காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி
x

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி

ஸ்ரீரங்கம், ஆக.14-

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீர்வரிசை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

அதன்படி இந்தாண்டு ஆடி 28-ம் நாளான நேற்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆண்டாள் யானை மீது வைத்து...

பின்னர் மாலை 4 மணி வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின் மாலை 4.45 மணி அளவில் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுத்தார். அப்போது, பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டனர்.

பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடைய வளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு அம்மா மண்டபம் படித்துறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி இருந்த உற்சவர் நம்பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story