ரூ.26½ கோடியில் நடைபெறும் நந்தன் கால்வாய் திட்ட பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

ரூ.26½ கோடியில் நடைபெறும் நந்தன் கால்வாய் திட்ட பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தாா்.
செஞ்சி,
திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் அணைக்கட்டில் இருந்து வரும் நந்தன் கால்வாய் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மாதப் பூண்டி, நல்லான் பிள்ளை பெற்றாள், பாக்கம், சோ.குப்பம், தேவதானம் பேட்டை வழியாக பனமலை ஏரி வரை செல்கிறது.
தற்போது விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் நந்தன் வாய்க்கால் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல், நந்தன்கால்வாய் அமைந்துள்ள கிராமப்புற பகுதியில் இருந்து கால்வாய் பகுதிக்கு செல்லும் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தளது வேளாண் இடுபொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக இந்த சாலையை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கால்வாய் திட்ட பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நல்லாண் பிள்ளைபெற்றாள் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, கால்வாய் புனரமைக்கும் பணியை விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஆய்வின் போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சோபனா, உதவி செயற் பொறியாளர் ரமேஷ், செஞ்சி ஒன்றிய குழுதலைவர் ஜெயக்குமார், செஞ்சி உதவி பொறியாளர் தினேஷ்குமார், செஞ்சி ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் அன்னமயில் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.






