பல்லக்கில் புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்


தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது.

திருவனந்தபுரம் நவராத்திரி விழா

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின்பு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

அங்கு நவராத்திரி விழாவில் பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு. அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.

முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டது

இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனால் தினமும் கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு பல்லக்கு வாகனத்தில் அம்மன் காலை 9.15 மணிக்கு எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது தமிழக, கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பிறகு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 4 ரதவீதிகளிலும் அம்மன் ஊர்வலம் நடந்தது.

மலர்தூவி அனுப்பினர்

அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவிளக்கேற்றி திருக்கண் சாத்தி அம்மனுக்கு மலர் தூவி வழி அனுப்பினர். ஊர்வலத்தின் பின்னால் தமிழக மற்றும் கேரள போலீசாரின் இசை வாத்தியங்கள் முழங்க தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் அணிவகுத்தபடி சென்றன. இந்த அம்மன் ஊர்வலம் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான் கடை, வில்லுக்குறி வழியாக மாலை 6.45 மணிக்கு பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைந்தது.

அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் கேரள, தமிழக போலீசார் சாமி சிலைக்கு வரவேற்பு கொடுத்தனர்.

முன்னதாக அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மேயர் மகேஷ், கோட் டாட்சியர் சேதுராமலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், துளசிதரன் நாயர், சுந்தரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, துணை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, நவராத்திரி பவனி விழா குழு தலைவர் வீரபத்திரப்பிள்ளை, கோவில் கண்காணிப்பாளர்கள் சண்முகம் பிள்ளை, சிவகுமார், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர் அய்யப்பன், விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரவீந்திரன், சுசீந்திரம் தி.மு.க. வார்டு செயலாளர் அழகு தாமோதரன், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, ஊர் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி

இந்த ஊர்வலத்தையொட்டி சுசீந்திரம் முதல் பத்மநாபபுரம் வரை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (வியாழக்கிழமை)காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உட்பரிகை மாளிகை மேல் மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாளை கேரள அறநிலையத்துறை மந்திரி, குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக இணை ஆணையரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் யானை மற்றும் குதிரை, பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளி திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்படுகிறது.

இந்த ஊர்வலம் திருவிதாங்கோடு, அழகிய மண்டபம், மார்த்தாண்டம் வழியாக இரவு குழித்துறை மகாதேவர் கோவில் சென்றடைகிறது. அங்கு சாமி சிலைகள் தங்கி விட்டு நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு களியக்காவிளை சென்றடையும்.

சாமி சிலைகள் ஒப்படைப்பு

அங்கு கேரள போலீசார் மற்றும் கேரள அதிகாரிகளுடன் சாமி சிலைகள் ஒப்படைத்ததை தொடர்ந்து இரவில் சாமி சிலைகள் நெய்யாற்றங்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்குகிறது. பின்னர் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு புறப்பட்டு மாலையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.

அதன் பிறகு தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்ககத்தில் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்திலும், குமார கோவில் முருகன் ஆரிய சாலை சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நடக்கிறது.

பூஜைகள் முடிந்த பின்பு சாமி சிலைகள் மீண்டும் பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், கேரள அரசும் இணைந்து செய்துள்ளது.


Next Story