நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாராயண பெருமாள் கோவில்
திருவெண்காடு அருகே நாங்கூரில் மணி மாட கோவில் என்று அழைக்கப்படும் நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது.
19 ஆண்டுகளுக்கு பின்னர் கோவிலின் ராஜகோபுரம், சன்னதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகள் திருப்பணி செய்யப்பட்டது. கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
குடமுழுக்கு
நேற்று காலை 7-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் மகாபூர்ணாவதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய யாக குடங்களை கோவில் ஸ்தலத்தார்கள் மேளம், தாளம் முழங்கிட ஊர்வலமாக கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கோபுர கலசங்களுக்கு வழிபாடு செய்தனர். பின்னர் ஒரே நேரத்தில் ராஜகோபுரம், சன்னதிகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. அப்போது அங்கே கூடி இருந்த திரளான பக்தர்கள் நாராயணா நாராயணா என சரண கோஷமிட்டனர்.
மகா அபிஷேகம்
இதையடுத்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், போலீஸ் சூப்பிரண்டு மீனா, கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிவேல் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்தலத்தார்கள், கணக்கர் ரத்தினவேல் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.