போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்.
தேவகோட்டை,
போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்.
நடவடிக்கை
தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக கணேஷ் குமார் சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார். இதையொட்டி அவர் `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:- தேவகோட்டை நகர் பகுதிகளில் மிக வேகமாக செல்லும் பஸ்களால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகிறது. தனியார் பஸ்கள் இனி 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சடையன்காடு விலக்கு சாலை அருகே 8 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த இடத்தில் வேகத்தடை அல்லது எச்சரிக்கை பலகைகள் அமைக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதை பொருட்கள்
கள்ள மார்க்கெட்டில் மது மற்றும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்துபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தேவகோட்டை நகரில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் தங்களது நியாயமான பிரச்சினைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.