அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நரிக்குடி யூனியன் தலைவியால் பரபரப்பு
ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறிய நிலையில், நேற்று திடீரென நரிக்குடி யூனியன் அலுவலகத்துக்கு வந்த யூனியன் தலைவி, தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரியாபட்டி,
ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறிய நிலையில், நேற்று திடீரென நரிக்குடி யூனியன் அலுவலகத்துக்கு வந்த யூனியன் தலைவி, தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் தலைவியாக இருந்தவர் பஞ்சவர்ணம். சுயேச்சையாக வெற்றி பெற்ற இவர், அ.தி.மு.க.வில் இணைந்து யூனியன் தலைவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த மார்ச் 3-ந் தேதி இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் பின்பு இதுவரை யூனியன் கூட்டம் நடைபெறவில்லை.
நேற்று 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 15 பணிகளுக்கு டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்ததும், பஞ்சவர்ணம், வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து, டெண்டர் விடும் விஷயத்தில் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறினார்.
தீக்குளிக்க முயற்சி
பின்னர் சிறிது நேரத்தில் பஞ்சவர்ணம், யூனியன் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து நரிக்குடி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து பஞ்சவர்ணம் சென்றுவிட்டார்.
இதனால் நேற்று நடைபெறுவதாக இருந்த டெண்டர் ஒத்திவைக்கப்படுவதாக யூனியன் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.