நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் தேரோட்டம்
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
புரட்டாசி மாத விழா
சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை காலசந்தி ஹோமமும், இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் வெங்கடாஜலபதி பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 6-ம் நாளான கடந்த 22-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தேரோட்டம்
9-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை காலசந்தி பூஜை மற்றும் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் கோவில் கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.