பாம்புகளின் புகலிடமான நாட்டாண்மை கழக கட்டிடம்


பாம்புகளின் புகலிடமான நாட்டாண்மை கழக கட்டிடம்
x
தினத்தந்தி 7 Nov 2022 7:30 PM GMT (Updated: 7 Nov 2022 7:31 PM GMT)

சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் பாம்புகளின் புகலிடமாக மாறி விட்டது. இதனால் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.

சேலம்

சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் பாம்புகளின் புகலிடமாக மாறி விட்டது. இதனால் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.

பாம்புகள் நடமாட்டம்

சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளது. இதுதவிர, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகம், பால்வளத்துறை துணை பதிவாளர் அலுவலகம், அமைப்புசாரா கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அலுவலக வளாகத்தில் செடி, கொடிகள், மரங்கள் அதிகளவில் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது.

மேலும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு சொந்தமான 2 வாகனங்கள் பயன்படுத்த முடியாமல் அங்குள்ள செட் ஒன்றில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக நாட்டாண்மை கட்டிட வளாகம் பாம்புகளின் புகலிடமாக காட்சி அளிக்கிறது. அதாவது பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள நேரத்திலேயே பாம்புகள் ஆங்காங்கே சுற்றிதிரிவரை காண முடிகிறது.

சாரை பாம்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மரத்தின் அடியில் சாரை பாம்பு ஒன்று அங்கும், இங்குமாக ஊர்ந்து செனறது. இதை அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் உபகரணங்களை வைத்து அங்கிருந்த பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இது ஒருபுறம் இருக்க நேற்று முன்தினம் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காரின் மேல்பகுதியில் கருநாகம் ஒன்று நின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒருசிலர் மட்டுமே நின்றனர். பாம்பு குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். பாம்பை பிடிக்க முடியவில்லை.

அரசு ஊழியர்கள் பீதி

நாட்டாண்மை கட்டிட வளாகத்திற்குள் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story