கனமழை எச்சரிக்கை எதிரொலி: கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை 42 பாதுகாப்பு மையங்களும் தயார்


கனமழை எச்சரிக்கை எதிரொலி: கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை  42 பாதுகாப்பு மையங்களும் தயார்
x

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று வருகை தந்தனர்.

கடலூர்,

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று வருகை தந்தனர். இதையொட்டி 42 பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து நாளை (வியாழக்கிழமை) காலை வட தமிழக கடலோர பகுதியின் அருகில் வந்தடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 10 குழுக்கள் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்படி கடலூருக்கு நேற்று மாலை அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் குல்ஜிந்தர் மூன் தலைமையில் 28 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தனர். தொடர்ந்து அவர்கள் கடலூர் குடிகாட்டில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு, மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பின்னர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இது தவிர கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே மழையால் பாதிக்கப்படும் பகுதியாக 278 இடங்கள் கண்டறியப்பட்டு்ள்ளன. இங்குள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 42 புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அங்கு குடிநீர், மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. முதல் தகவல் அளிப்பவர்கள் 5 ஆயிரம் பேரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே கடலூர் மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல், தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரமும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து கன மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.


Next Story