தேசிய கண்தான விழிப்புணர்வு கண்காட்சி
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் தேசிய கண்தான விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, ரோட்டரி அரவிந்த் கண் வங்கி சார்பில் 38-வது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு கண்தான விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா கலந்து கொண்டு திறந்து வைத்தார். கண்கள் எப்படி பாதிக்கப்படுகிறது. கண்களை எப்படி பாதுகாக்க வேண்டும். கண் தானம் செய்வது எப்படி என்பது குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது அரவிந்த் கண்மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் ராமகிருஷ்ணன், தலைமை மருத்துவர் மீனாட்சி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து டாக்டர் ராமகிருஷ்ணன் கூறும் போது, தேசிய கண்தான வாரவிழா இன்று (அதாவது நேற்று) தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளது. இளம்வயதில் மரணம் அடைபவர்களின் உறவினர்களிடம் அவர்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி கண்கள் தானமாக பெறப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லையில் 230 கண்களும், தூத்துக்குடியில் 720 கண்களும் தானமாக பெறப்பட்டு உள்ளது என்றார்.