மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை


மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
x

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாற்றுத்திறனாளின் நலன்கருதி அவர்களுக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற்றிடவும், மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் கட்டண சலுகை, மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன், அரசின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை பெற இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மிகவும் அவசியமாகும். எனவே தேசிய அடையாள அட்டையை பெற ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் (எலும்பு அறுவை சிகிச்சை) பிரவீன்பால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.


Next Story