தேசிய கல்விநிறுவன தரவரிசை பட்டியல் வெளியீடு: ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதல் இடம்


தேசிய கல்விநிறுவன தரவரிசை பட்டியல் வெளியீடு: ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதல் இடம்
x

தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) வெளியிட்ட பட்டியலில் ஒட்டு மொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 4-வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைவிட சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

சென்னை,

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) தொடங்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள 100 கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தை பெற்று இருக்கிறது. 2-வது இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும், 3-வது இடத்தில் மும்பை ஐ.ஐ.டி.யும் உள்ளது.

இந்த தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் 16-வது இடத்திலும், வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (வி.ஐ.டி.) 18-வது இடத்திலும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 21-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 22-வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 24-வது இடத்திலும் இருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 4-வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2018-ம் ஆண்டு 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த ஆண்டில் 25-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம், இந்த ஆண்டு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

பல்கலைக்கழக பட்டியலில்...

பல்கலைக்கழக பட்டியலை பொறுத்தவரையில், 100 பல்கலைக்கழக பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் 5-வது இடத்திலும், வி.ஐ.டி. 9-வது இடத்திலும், பாரதியார் பல்கலைக்கழகம் 15-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 19-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 20-வது இடத்திலும் இருக்கிறது.

கல்லூரிகளின் தரவரிசையில் டெல்லி மிராண்டா ஹவுஸ் நிறுவனம் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. இதே வரிசையில் மாநிலக் கல்லூரி 3-வது இடத்திலும், லயோலா கல்லூரி 4-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.

சென்னை மருத்துவக் கல்லூரி

மருத்துவம் சார்ந்த தரவரிசையில், வேலூர் கிறிஸ்தவ கல்லூரி 3-வது இடத்தையும், அம்ரிதா விஷ்வா வித்யாபீடம் 8-வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 12-வது இடத்தையும், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 15-வது இடத்தையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 20-வது இடத்தையும் பெற்றிருக்கிறது. இதில் சென்னை மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் முன்னேறி உள்ளது.


Next Story