22 மாநிலங்களை சேர்ந்த 1200 பேர் பங்கேற்பு:கடலூரில், தேசிய அளவிலான சிலம்பம் போட்டி


22 மாநிலங்களை சேர்ந்த 1200 பேர் பங்கேற்பு:கடலூரில், தேசிய அளவிலான சிலம்பம் போட்டி
x

கடலூரில், தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பை சிலம்பம் போட்டியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கடலூர்


கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் மற்றும் கடலூர் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் முதலாவது தேசிய பெடரேஷன் கோப்பை சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கடலூர் புனித வளனார் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதன் தொடக்க விழாவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, போட்டியை சிலம்பம் சுற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார். அத்தகைய பயிற்சியை இளைஞர்கள் பெற வேண்டும். நான் 20 வயதில் 2 மாதம் சிலம்பம் கற்றேன். உடலுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. சிலம்பம் கற்றால் கம்பீரம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இளைஞர்களிடம் உணவு பழக்க, வழக்கம் மாறி போய் இருக்கிறது. பழைய சாதத்திற்கும், இட்லி, தோசைக்கும் வித்தியாசம் உள்ளது. டாக்டர்கள் இப்போது காலையில் பழைய சாதம் சாப்பிடுமாறு அறிவுறுத்துகிறார்கள். ஆரம்ப காலத்தில் கிராமங்களில் சிலம்பம் தான் தற்காப்பு கலையாக இருந்தது. தற்போது செல்போனில் கேம் விளையாடும் அளவுக்கு இளைஞர்கள் வந்து விட்டார்கள். இந்த நிலை மாறி கிராமங்கள் தோறும் இது போன்ற வீரர்கள் உருவாக வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.

22 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள்

தொடர்ந்து போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்பட 22 மாநிலங்களை சேர்ந்த 1200 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அவர்களை வயது வாரியாக பிரித்து பல்வேறு போட்டிகள் நடக்கிறது. நேற்று மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுக்கு வேல், சுருள் வாள், ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஒற்றை வாள் வீச்சு, சொருவு கத்தி, மான் கொம்பு, ஆயுத சுற்று, குழு சுற்று போன்ற போட்டிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக நடந்தது.

விழாவில் புனித வளனார் கல்லூரி செயலாளர் சுவாமிநாதன், கவுரவ தலைவர் ஆசான் வித்யாபதி, ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் அசோகன், போட்டி இயக்குனர் சந்திரசேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட மாணவரணி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார். போட்டிகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.


Next Story