தேசிய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி


தேசிய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
x

ஜோலார்பேட்டையில் நடைபெறும் தேசிய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

பூப்பந்தாட்ட போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் அகில இந்திய பூப்பந்தாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் மற்றும் ஜோலார்பேட்டை பூப்பந்தாட்ட கழகம் இணைந்து நடத்தும் 8-ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த பூப்பந்தாட்ட போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கலெக்டர் தொடங்கிவைத்தார்

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட பூப்பந்தாட்ட செயலாளர் ம.அன்பழகன் தலைமை தாங்கினார். கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு கொடியேற்றி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, யோகாசன நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து கலெக்டர் போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விளையாடுவதால் உடல் மட்டும் இன்றி மனமும் ஆரோக்கியமாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் மனதில் எப்பொழுதும் பொறாமை இருக்காது. மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்போம். இதுபோன்ற விஷயங்கள் நாம் விளையாட்டு வீரராக இருக்கும் போது தான் தோன்றும்.

கண்ணாக

தடகளப் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்று அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது நான் உங்கள் முன்னாடி நிற்கிறேன் என்றால் எந்த செயலை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். சரியாக செய்யவில்லை என்றால் அதை ஒத்துக்கொள்வோம். அதன் பிறகு சிறப்பாக செய்ய முயற்சிப்போம். பல தோல்விகளை கண்டிருப்போம். மீண்டும் வெற்றி பெற முயற்சிப்போம், வெற்றி பெறுவோம். விளையாட்டு வீரர்கள் நன்றாக படிக்க மாட்டார்கள் என நினைப்பார்கள். விளையாட்டு வீரர்கள் நன்றாக படிப்பார்கள். ஒரு பிரச்சினையை ஆலோசனை செய்து சிறப்பான முடிவை எடுக்கும் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். விளையாட்டு ஒரு கண்ணாக இருந்தால் கல்வியை ஒரு கண்ணாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் எழிலரசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன், நகராட்சி ஆணையர் பழனி, ஜே.பி.பி.சி. செயலாளர் திம்மராயன், துணைத் தலைவர் ஜலபதிபாபு, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.எஸ்.பெரியார் தாசன் உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள், பூப்பந்தாட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர்.


Next Story