தேசிய அளவிலான மாரத்தான் போட்டி


தேசிய அளவிலான மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி பல்கலைக்கழக சாலையில் கிரீடாபாரதி தென் தமிழ்நாடு பிரிவின் சார்பில், தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக, தேசிய அளவிலான மாரத்தான் போட்டிகள் 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ., ஆண்கள், பெண்களுக்கு 15 கி.மீ. தூர ஓட்டம் என்று தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 239 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்க செயலரும், அகில இந்திய கால்பந்து கழக தலைவருமான கல்யாணி சௌபை, அகில இந்திய கிரீடா பாரதி தலைவர் கோபால் சைனி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழக பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், மான் கொம்பு சண்டை, களரி, மால்கம், வாள் சண்டை போன்றவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. போட்டியில் முதல் 25 இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தென் தமிழக கிரீடா பாரதி தலைவர் திருமாறன் வரவேற்றார். தென்னிந்திய கிரீடா பாரதி ஒருங்கிணைப்பாளர் அசோக் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை வைரவசுந்தரம், பெரியசாமி ஆகியோர் செய்திருந்தார்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர் சிவராஜா மாதவன் நன்றி கூறினார்.

1 More update

Next Story