1,307 வழக்குகளில் ரூ.10.82 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,307 வழக்குகளில் ரூ.10 கோடியே 82 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,307 வழக்குகளில் ரூ.10 கோடியே 82 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதேபோன்று ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். தாமோதரன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் வேல்முருகன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நடுவர் ராஜ சிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி லீலா, கூடுதல் சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், கிருஷ்ணகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, சங்க செயலாளர் ராஜா விஸ்வநாத் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரூ.10.82 கோடிக்கு தீர்வு
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு 6,430 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,307 வழக்குகளில் ரூ.10 கோடியே 82 லட்சத்து 76 ஆயிரத்து 850-க்கு தீர்வு காணப்பட்டது.
இதில் முக்கியமாக சாலை விபத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்த பல மனுதாரர்கள் இடைவிடாது பெய்த மழையிலும் தங்கள் வக்கீல்களுடன் விசாரணைக்காக ஆஜராகி சமரசமாக வழக்குகளில் இழப்பீடு பெற்றுச் சென்றனர்.