தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
x

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி பயன்பாட்டியல் மற்றும் கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் கடந்த 28-ந் தேதி தொடங்கி 1-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கருத்தரங்கம் "தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் முன்னோடி" என்ற தலைப்பில் நடைபெற்றது. முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியை உமாதேவி பொங்கியா வாழ்த்துரை வழங்கினார். 28-ந் தேதி திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை பேராசிரியை சண்முகவடிவு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு "செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தின் தேவை" குறித்து விரிவாக பல செயல்முறை எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்கினார். அதனைதொடர்ந்து வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் கணினி அறிவியல் துறையின் இணைப்பேராசிரியர் கணேஷ் மாணவிகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் "செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் கருவிகள்" மற்றும் அதனை எவ்விதமாக நம்முடைய நடைமுறை நிகழ்வுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

29-ந் தேதி சிறப்பு விருந்தினராக திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியை செரில் அன்டோனெட்டுமெனில் "நேர்மறை எண்ணங்கள்" என்ற தலைப்பில், வாழ்வில் நேர்மறை எண்ணங்கள் இருந்தால் மட்டும் தான் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை உருவாக்க முடியும் மற்றும் பல லட்சியங்களை அடைய முடியும் என்ற கருத்துக்களை மாணவிகளின் உள்ளத்தில் உறுதியாக பதிய வைத்தார். 30-ந் தேதி சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் இணைப்பேராசிரியர் முத்துராமலிங்கம் "பூஜ்ஜிய நம்பிக்கை கட்டமைப்பு" என்ற தலைப்பில் நெட்வொர்க்கின் தாக்குதல் மேற்பரப்பைக் குறைப்பது, அச்சுறுத்தல்களின் பக்கவாட்டு இயக்கத்தை தடுப்பது மற்றும் தரவு மீறலின் அபாயத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

31-ந் தேதி சிறப்பு விருந்தினராக திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறையின் இணைப்பேராசிரியை விண்ணரசி "மெய்நிகர் மயமாக்கல் கிளவுட் கம்ப்யூட்டிங்கின் வகைப்பாட்டியல்" என்ற தலைப்பில் இணையதளம் மூலமாக தகவல்களை பகிரும் செயல் முறைகளையும், இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகளையும், கணினியின் ஆற்றல் சேமிப்பு மற்றும் தரவுத்தளங்கள் போன்ற தொழில்நுட்ப சேவைகளை தேவைக்கேற்ப எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

1-ந் தேதி சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.சி.டி. அகாடமி ரிலேஷன்ஷிப் மேலாளர் சந்தோஷ் கலந்து கொண்டு "உங்கள் திறனைத்திறத்தல்" என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு திறன்கள் பற்றியும், வெற்றி பெறுவதற்கான அத்தியாவசிய பழக்க வழக்கங்கள் பற்றியும், மாணவிகளுக்குள் இருக்கும் திறமைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றியும் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் பல்வேறுவிதமான வேலைவாய்ப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். முன்னதாக கணினி அறிவியல் துறையை சேர்ந்த மாணவி சப்ரின் வரவேற்றார். முடிவில் இளங்கலை கணினி அறிவியல் துறையை சேர்ந்த மாணவி தேவதர்ஷினி நன்றி கூறினார். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையை சார்ந்த பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் செய்து இருந்தனர்.


Next Story