தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்: தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு யார் காரணம்?
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்: தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு யார் காரணம்? விசாரணை நடத்த டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி, போபால் மற்றும் குவாலியர் நகரங்களில் கடந்த 5-ந் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாணவர் கூட கலந்து கொள்ளவில்லை. இது தமிழ்நாட்டுக்கு மரியாதை குறைவு ஆகும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 254 மாணவர்கள், 249 மாணவிகள் என 503 பேரை அனுப்பி வைக்கக் கோரும் கடிதங்கள் கடந்த மே 11-ந் தேதி முதலே தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அழைப்புக் கடிதங்களைப் பார்த்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளத் தவறியதால்தான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு என்ஜினீயரிங் பிரிவில் 500 இடங்கள், மருத்துவப் படிப்பில் 7 இடங்கள், பல் மருத்துவப் படிப்பில் ஒரு இடம் வழங்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு கலந்து கொள்ளாதது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். இந்த சிக்கலில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.