2-வது முறையாக தேசிய தரச்சான்று
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 2-வது முறையாக தேசிய தரச்சான்று கிடைத்து உள்ளதாக கண்காணிப் பாளர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 2-வது முறையாக தேசிய தரச்சான்று கிடைத்து உள்ளதாக கண்காணிப் பாளர் தெரிவித்தார்.
தேசிய தரச்சான்று
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 4 பேர் கொண்ட தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வை தொடர்ந்து அதன் அறிக்கையை தேசிய சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேசிய சுகாதார அமைப்பு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதைஆஸ்பத்திரியில் நடந்த கூட்டத்தில் நேற்று கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்தார். மேலும் இந்த விருது கிடைக்க ஒத்துழைப்பு அளித்த டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
பிரசவ வார்டு
பின்னர் அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேசிய தரச்சான்று கிடைத்தது. தற்போது 2-வது முறையாக தேசிய தரச்சான்று கிடைத்து உள்ளது. இந்த சான்று பெறுவதற்கு ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு துறைகளிலும் தலா 75 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 75 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். அதன்படி ஆபரேசன் பிரிவு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், தீவிர சிகிச்சை, எக்ஸ்-ரே, ஸ்கேன், மருந்தகம், பிணவறை, பொது நிர்வாகம், குடும்ப நலம் ஆகிய பிரிவுகளுக்கு 86 சதவீத மதிப்பெண்களும், பிரசவ பகுதிக்கு 92 சதவீத மதிப்பெண்களும், பிரசவ வார்டுக்கு 90 சதவீத மதிப்பெண்களும் கிடைத்து உள்ளன. இந்த 2 பிரிவிற்கு மட்டும் தனியாக ரூ.6 லட்சம் வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.40 லட்சம்
மேலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி கிடைக்கும். இந்த நிதியை கொண்டு ஆஸ்பத்திரியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். தமிழகத்தில் 2-வது முறையாக தேசிய தரச்சான்று பெற்ற ஆஸ்பத்திரி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிதான். ஒட்டுமொத்த கூட்டு முயற்சிக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. தற்போது உள்ளவாறு தொடர்ந்து ஆஸ்பத்திரி சிறப்பாக செயல்படுகிறதா? என்று தேசிய தரச்சான்று குழு கண்காணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.