தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று ஊட்டிக்கு வருகை


தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று ஊட்டிக்கு வருகை
x
தினத்தந்தி 25 Sept 2023 2:45 AM IST (Updated: 25 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று(திங்கட்கிழமை) ஊட்டிக்கு வருகின்றனர். அவர்கள் புலிகள் இறந்த இடங்களில் நேரில் ஆய்வு செய்கின்றனர்.

நீலகிரி

ஊட்டி

தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று(திங்கட்கிழமை) ஊட்டிக்கு வருகின்றனர். அவர்கள் புலிகள் இறந்த இடங்களில் நேரில் ஆய்வு செய்கின்றனர்.

புலிகள் சாவு

நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பக உள் மற்றும் வெளிமண்டல பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 10 புலிகள் உயிரிழந்தன. இது வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புலிகள் உயிரிழப்பு குறித்து, உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த டேராடூனில் இருந்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) ஊட்டிக்கு நேரில் வர உள்ளனர். இந்த குழுவில் தேசிய புலிகள் ஆணையத்தின் குற்ற பிரிவு ஐ.ஜி. மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

வனத்துறையினரிடம் விசாரணை

இவர்கள் கடந்த மாதம் 17-ந் தேதி முதுமலை புலிகள் காப்பக சீகூர் வனச்சரகத்தில் 2 புலி குட்டிகள் உயிரிழந்த பகுதி, 18-ந் தேதி நடுவட்டம் பகுதியில் புலி இறந்து கிடந்த இடம், 30-ந் தேதி கார்குடி பகுதியில் புலி இறந்த இடம், இந்த மாதம் 9-ந் தேதி எமரால்டு பகுதியில் 2 புலிகள் இறந்த இடத்திலும் ஆய்வு செய்ய உள்ளனர்.

குறிப்பாக சின்ன குன்னூர் பகுதியில் மீட்கப்பட்ட 4 புலிக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் குறித்தும் ஆய்வு நடத்த இருக்கின்றனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை அறிக்கையை தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்புவார்கள். அதன்பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story