தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனம்


தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனம்
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:47 PM GMT)

கடலூரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர்


தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்துக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் வழங்கப் பட்டுள்ளது. இந்த வாகனத்தை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காசநோய் இல்லா தமிழகம் 2025 என்ற இலக்கை அடைவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கி உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்துக்கும் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

பரிசோதனை

இந்த எக்ஸ்ரே வாகனம் மூலம் கிராமங்களுக்கு சென்று காசநோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படும் எக்ஸ்ரே-ல் காசநோய் என்று கண்டறியப்பட்டால், காசநோய்க்கான சிகிச்சை உடனடியாக தொடங்கப்படும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சளி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, காசநோய் பிரிவு துணை இயக்குனர் கருணாகரன், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், டாக்டர் கேசவன் மற்றும் காசநோய் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அதைத்தொடர்ந்து தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்து பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 2022-ம் ஆண்டில் இருந்து டிசம்பர் 2022 வரைக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக 78 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் கூட்டு மருந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

தொடர்ந்து, தொடங்கிய பேரணியானது டவுன்ஹாலில் இருந்து பாரதிசாலை, தலைமை தபால் நிலையம் வழியாக சென்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது.

இதில் துணை இயக்குனர் (தொழுநோய்) சித்திரைச்செல்வி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரா, கண்காணிப்பாளர் நடராஜன், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் கேசவன், இந்திய மருத்துவ சங்க தலைவர் கண்ணன், செயலாளர் வெங்கட்ரமணன், டாக்டர்கள் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ் மாவட்ட நல கல்வியாளர் சுரேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story