இயற்கை உரம் தயாரிக்கும் பணி தீவிரம்


இயற்கை உரம் தயாரிக்கும் பணி தீவிரம்
x

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்,

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கை உரக்கிடங்கு

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட காய்கறி மொத்த வியாபாரிகளும் 500-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளும் கடைகள் அமைத்து நாள்தோறும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.இதை கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் மொத்தம் மற்றும் சில்லறை விலையில் வாங்கி செல்வது வழக்கம்.இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 4 டன் காய்கறி கழிவுகள் உற்பத்தி ஆகின்றன.

காய்கறி கழிவுகள்

இவ்வாறு தேங்கி கிடக்கும் காய்கறி கழிவுகளை சேகரித்து மக்க செய்து இயற்கை உரம் தயாரிப்பதற்காக மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இயற்கை உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் நாள்தோறும் மார்க்கெட் பகுதியில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை திரட்டி சேமித்து உரக்கிடங்கிற்கு கொண்டு வந்து அவற்றில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை அகற்றி காய்கறி கழிவுகளை மக்க செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

4 டன் குப்பைகள்

இதுகுறித்து உரக்கடங்கில் வேலை பார்க்கும் பணியாளர்கள் கூறியதாவது:-

நாள்தோறும் மார்க்கெட்டில் விற்பனை முடிந்த பிறகு சுமார் 4 டன் அளவு குப்பைகள் தேங்கிக் கிடக்கும். இவற்றை திரட்டி சேமித்து தள்ளுவண்டிகள் மூலம் மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கிற்கு கொண்டுவந்து அவற்றில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் தேவையில்லாத குப்பைகளை தரம் பிரித்து அகற்றி உரக்கிடங்கில் அமைக்கப்பட்ட சேமிப்பு தொட்டிகளில் காய்கறி கழிவுகளை நிரப்பி அவற்றை முழுவதுமாக மக்க செய்ய தேவையான ரசாயன மருந்துகளை தெளித்து வருகிறோம்.

தரமான இயற்கை உரம்

இந்த கழிவுகள் சுமார் 20 முதல் 25 நாட்களுக்குள் முழுவதுமாக மக்்கி தரமான இயற்கை உரமாக மாறிவிடுகிறது. பின்னர் இந்த உரங்களை கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் இலவசமாக வழங்கி வருகிறது.இதன் மூலம் நாள் தோறும் எங்களுக்கு வேலை கிடைப்பதுடன் மார்க்கெட்டில் உற்பத்தியாகும் கழிவுகள் அகற்றப்படுவதோடு விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ள இயற்கை உரங்கள் கிடைக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story