பாண்டலம் ஏரிக்கரை துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
பாண்டலம் ஏரிக்கரை துர்க்கையம்மன் கோவிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா நிறைவடைந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் கடந்த 15-ந்தேதி முதல் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொலுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து நவராத்திரி நிறைவு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட அம்மன் கொலு முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கும், கொலு பொம்மைகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில், வாசவி அம்மன் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில்களிலும் நவராத்திரி நிறைவு விழா நடந்தது.