ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது
ஆடிப்பூரத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோபி
கோபியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு மலர் மற்றும் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதேபோல் கோபியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அந்தியூர்
ஆடிப்பூர விழாவையொட்டி அந்தியூர் சிங்கார வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் நடை நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தயிர் சாதம், தக்காளி சாதம் உள்பட பல்வேறு சாதங்கள் சாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் அந்தியூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை பெருமாள் கோவில் மற்றும் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவில்களில் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து ஆண்டாள், ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது சாமிக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள், கயிறு, குங்குமம், வளையல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் ரோட்டில் வாய்க்கால் மேடு பகுதியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. ஆடிப்பூரத்தையொட்டி இந்த கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.