அம்மாபேட்டை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
அம்மாபேட்டை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்..
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி காலனி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 57). இவர் நேற்று மதியம் பூனாச்சி கரியகாளியம்மன் கோவில் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தியின் 2 ஆடுகளை திருடி மோட்டார்சைக்கிளில் ஏற்றி செல்வதை கண்டார். இதை கண்டதும், அவர் 'திருடன், திருடன்' என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பூதப்பாடி வாய்க்கால் மேடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஆடுகளுடன் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் குருவரெட்டியூர் பெரியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), மாத்தூர் குண்டந்தோட்டத்தை சேர்ந்த குமார் (25) என்பதும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து சாந்தியின் ஆடுகளை திருடியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 ஆடுகள், மேட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.