அந்தியூர் அருகே தீயில் கருகி மூதாட்டி சாவு குளிக்க வெந்நீர் வைத்தபோது பரிதாபம்
அந்தியூர் அருகே குளிக்க வெந்நீர் வைத்தபோது தீயில் கருகி மூதாட்டி இறந்தாா்
அந்தியூர் அருகே குளிப்பதற்காக அடுப்பில் வெந்நீர் வைத்தபோது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலையில் தீப்பிடித்தது
அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி வெள்ளாளபாளையம் மாக்கல்புதூரை சேர்ந்தவர் ராசா. இறந்துவிட்டார். இவருடைய மனைவி சொக்காயம்மாள் (வயது 70). இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் போட்டு உள்ளார். அப்போது அவருடைய சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.
சாவு
உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சொக்காயம்மாள் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து உடல் கருகிய நிலையில் காணப்பட்ட மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.