அந்தியூர் அருகே பொன்னாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழாஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்


அந்தியூர் அருகே பொன்னாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழாஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-26T01:00:45+05:30)

ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

ஈரோடு

அந்தியூர் அருகே அத்தாணி செம்புளிச்சாம்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குண்டம் திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நேற்று முன்தினம் 30 அடி நீளம் குண்டம் பக்தர்கள் இறங்குவதற்காக தயார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதலில் குண்டத்துக்கு பூஜை செய்து பூசாரி குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவரும் பிரம்பில் பூ சுற்றிக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கைகள் தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள்.

தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திருவிழாவில் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், கோபி, சவுண்டபூர் ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் திருவிழா நடக்கக்கூடிய இடம் அந்தியூர் வனப்பகுதி என்பதால் வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story