அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

அந்தியூர் அருகே சீராக குடிநீர் வினியோகிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே சீராக குடிநீர் வினியோகிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர்

அந்தியூர் அருகே உள்ள மரவாபாளையத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்று தண்ணீர் குழாய் வழியாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக மரவாபாளையம் பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கொளுத்தும் வெயிலில் சீராக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் கூறியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் மரவாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மாத்தூர் ஊராட்சி தலைவர் பானுமதிகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடி ஏற்பாடு

அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறுகையில், பட்லூரில் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து விட்டன. அதனால்தான் மரவாபாளையத்துக்கு குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. உடனடியாக இந்த பிரச்சினையை சரிசெய்து மரவாபாளையத்துக்கு குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தியூர்-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story