ஆண்டிப்பட்டி அருகேஅரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை
ஆண்டிப்பட்டி அருகே அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு மாதிரிப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
பின்னர் மாணவர் சேர்க்கைக்கான ஆணையை கலெக்டர் வழங்கி பேசும்போது, இந்த கல்வியாண்டில், மாதிரி பள்ளிகள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பிற்காக தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்காக 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட உள்ளது. மேலும் மாணவர்களுக்கு உணவு, தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடு்க்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வசந்தா, அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பூங்குழலி, மண்டல ஒருங்கிணைப்பாளர் (மாதிரி பள்ளிகள் குழுமம்) ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.