ஆண்டிப்பட்டி அருகே கண்மாய் ஏலம் எடுப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்:போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
ஆண்டிப்பட்டி அருகே கண்மாய் ஏலம் எடுப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஏலம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
கண்மாய் ஏலம்
தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் கடம்பன்குளம், புதுக்குளம், பட்டத்திக்குளம், தாமரைக்குளம், நெடுங்குளம், வேலன்குளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் மீன் பிடிப்பதற்கான ஏலம் ஆண்டிப்பட்டி வைகை அணை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக 10 கண்மாய்களை ஏலம் எடுக்க 837 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஏலத்தை மீன்வளத்துறையின் மண்டல துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சராஜா ஆகியோர் நடத்தினர். அப்ேபாது ஏலம் எடுக்க ஒவ்வொருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். இதற்காக மீன்வளத்துறை அலுவலகத்திற்கு வெளியே சுமார் 500 பேர் கூடியிருந்தனர். இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினர் மோதல்
இந்நிலையில் முதலாவதாக பெரியகுளம் அருகே உள்ள வடகரை வேலன்குளம் கண்மாய் ஏலம் நடைபெற்றது. ஏலம் தொடங்கிய சிறிது நேரத்தில் அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினர் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தகராறில் ஈடுபட்ட நபர்களை கலைக்க முயன்றனர்.
அப்போது தகராறில் ஈடுபட்டவர்கள், போலீசாருக்கு இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக வைகை அணை மீன்வளத்துறை அலுவலக வளாகம் போர்க்களம் போல காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக கூடியிருந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கண்மாய் ஏலத்தை மறுதேதி அறிவிக்காமல் ஒத்தி வைப்பதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஒலிப்பெருக்கியில் அறிவித்தார். அதன்பின்னர் ஏலத்திற்கு வந்த அனைவரும் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். கண்மாய் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.