ஆண்டிப்பட்டி அருகேசுற்றுலா வேன் மோதி கொத்தனார் பலி
ஆண்டிப்பட்டி அருகே சுற்றுலா வேன் மோதி கொத்தனார் பலியானார்.
மதுரை மாவட்டம் வாலாந்தூர் அருகே உள்ள பெரியகுறவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. அவருடைய மகன் அஜித்குமார் (வயது 24). கொத்தனார். இவரது மனைவி பிரசவத்திற்காக, தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் அஜித்குமார் தனது குழந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை பெரியகுறவக்குடியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கோம்பைக்கு வந்து கொண்டிருந்தார். ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சுற்றுலா வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.