ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி?


ஆண்டிப்பட்டி அருகே  வைகை ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி?
x

ஆண்டிப்பட்டி அருகே மாயமான பெண், வைகை ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேனி

பெண் மாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறுக்கம்பட்டியை சேர்ந்தவர் சஞ்சீவிக்குமார். அவருடைய மனைவி சித்ரா (வயது 45). கடந்த மாதம் 30-ந்தேதி இவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையை அடுத்த குரியம்மாள்புரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார்.

இந்தநிலையில் வெளியே சென்று வருவதாக தனது தந்தையிடம் கூறி விட்டு சித்ரா சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சித்ராவின் தந்தை, சஞ்சீவிக்குமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார்.

அப்போது அங்கும் அவர் செல்லவில்லை என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ராவின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி?

இது தொடர்பாக வைகை அணை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வைகை அணை முன்பு உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் ஆற்றில் குதித்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் சித்ரா அணிந்திருந்த செருப்பு கிடந்தது. இதனால் அவர், வைகை ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வைகை அணை பாலத்தில் இருந்து பிக்கப் அணை வரை தேங்கியுள்ள தண்ணீரில் தேடினர். இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

தேடுதல் வேட்டை தீவிரம்

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. அப்போது பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், பழனிசாமி ஆகியோர் தலைமையில் கமாண்டோ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 30 பேர் ரப்பர் படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றது. இதனால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் மீண்டும் தேடும் பணி நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story