அறச்சலூர் அருகே தோட்டத்தில் புகுந்து கன்றுக்குட்டியை இழுத்து சென்ற மர்ம விலங்கு
அறச்சலூர் அருகே தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கன்றுக்குட்டியை இழுத்து சென்றது.
அறச்சலூர் அருகே தோட்டத்தில் புகுந்து கன்றுக்குட்டியை மர்மவிலங்கு இழுத்து சென்றது.
கன்றுக்குட்டியை இழுத்து சென்றது
அறச்சலூர் கிழக்குத் தலவுமலை அருகே உள்ள ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு சொந்தமான தோட்டம் ஊரையொட்டி உள்ளது. இங்கு அவர் மாடுகள் கட்டி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் நேற்று காலை மாடுகளை பார்க்க சென்றனர்.
அப்போது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 6 மாத கன்றுக்குட்டியை காணவில்லை. அருகே ஏதோ ஒரு விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. தோட்டத்துக்குள் புகுந்த மர்ம விலங்கு, கன்றுக்குட்டியை இழுத்து சென்றது தெரியவந்தது.
சிறுத்தை புலியா?
இதுகுறித்து ஈரோடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர் சந்தோஷ் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அவர்கள் அங்கு பதிவான விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, 'கண்காணிப்பு கேமரா பொருத்தி எந்த விலங்கு என்பதை கண்டுபிடித்து அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். தோட்டத்துக்குள் புகுந்த விலங்கு சிறுத்தைப்புலியாக இருக்கக்கூடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.